×

சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் விரைவில் தயாராகிறது படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்

சென்னை: இந்தியா முழுவதும் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பற்றிய பேச்சு பரவலாக எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 34 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தகட்டமாக பல்வேறு வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னை – மைசூரு, சென்னை – கோவை, சென்னை – விஜயவாடா, சென்னை – திருநெல்வேலி என 4 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தகட்டமாக படுக்கை வசதிகள் உடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.

இதற்கான முதற்கட்ட பணிகள் பெங்களூரு பி.இ.எம்.எல் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளன. அதன்பிறகு சென்னை ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் முழு வீச்சில் பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலின் மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்லீப்பர் கோச் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரும் என்று ஒரு மகிழ்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், வந்தே மெட்ரோ ரயில்கள் குறுகிய தூர பயணங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 100 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும். மற்றபடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கும் பெரும்பாலான வசதிகள் அப்படியே இருக்கும் என்கின்றனர். இதன்மூலம் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களின் நெருக்கடி குறையும் எனக் கூறுகின்றனர். இந்த ரயில் சேவை, வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வந்தே மெட்ரோ ரயில்களின் சிறப்பம்சங்கள் என்று எடுத்து பார்த்தால் பெரிய லிஸ்டே இருக்கிறது.

உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், முக்கியமான நகரங்களுக்கு இடையில் நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 முறை வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் விரைவு மற்றும் சொகுசு பயண அனுபவத்தை வழங்கும். மெட்ரோ ரயில்களை போல 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். தினசரி வேலைக்கு செல்வோர், மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பயணத்தை அளித்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான தயாரிப்பு பணியில் சென்னை ஐ.சி.எப், லக்னோவில் உள்ள ஆர்.டி.எஸ்.ஓ ஆகியவை ஈடுபடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இயக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

அதிலும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு வந்தே மெட்ரோ ரயில் வந்தால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இங்கிருந்து திருப்பதிக்கு எளிதில் செல்ல முடியும். இருப்பினும் ஒரு நாளில் சென்னை, விஜயவாடாவில் இருந்து தலா ஒருமுறை மட்டுமே பயணிக்கலாம். அதுவே சென்னையில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக இயக்கினால் 4 அல்லது 5 முறை பயணிக்கலாம். ஏற்கனவே சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. இந்த சூழலில் வந்தே மெட்ரோ ரயில் வந்தால் பெரிதும் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் விரைவில் தயாராகிறது படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் appeared first on Dinakaran.

Tags : Chennai I. C. F ,Chennai ,India ,. C. F Factory ,Dinakaraan ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...